மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்றும், இனிமேல் கூட்டணிக் கதவை தட்டும் எந்தக் கட்சிக்கும் தொகுதி எதுவும் ஒதுக்கப்படாது என்று தினகரன் கறாராகத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் இணைய தமிழக அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை ஆர்வம் காட்டின. இதனால் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனோ தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டு படுகூலாக தமிழகம் முழுவதும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் தீவிரம் காட்டி வந்தார்.
தற்போது திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் இடம் கிடைக்காமல் தனித்து விடப்பட்ட சில கட்சிகள் தினகரன் தரப்பை கூட்டணிக்காக அணுகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், மக்களவைத் தேர்தலில் அமமுக 40 தொகுதிகளில் போட்டியிடும், கூட்டணிக்கு 2 தொகுதிகள் போக எஞ்சிய 38 தொகுதிகளிலும் தனித் தே போட்டியிடும் .இனிமேல் கூட்டணிக்கு எந்தக் கட்சி வந்தாலும் அவர்களுக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படாது. ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம் என்று கறாராக தெரிவித்தார்.
எங்களுடன் கூட்டணிக்காக பல கட்சிகள் அணுகின. ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்த அந்தக் கட்சிகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது அதிமுக அமைத்துள்ள கூட்டணி வடிகட்டிய சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றும், ஜெயலலிதாவுக்கு எதிரானவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு ஜெயலலிதா படத்தைக் காட்டி அதிமுக ஓட்டுக் கேட்கக் கூடாது என்றும் தினகரன் தெரிவித்தார்.