கூட்டணி தொடர்பான தேமுதிகவின் நிலைப்பாடு ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், கூட்டணி விஷயத்தில் தேமுதிக இன்னும் முடிவெடுக்க முடியாமல் தட்டுத்தடுமாறி திண்டாடி வருகிறது. நேற்று அதிமுகவுடனும், பாஜக தலைவர்களுடனும் பல கட்ட பேச்சு நடத்தியும் கூட்டணி உறுதியாகவில்லை. இடையில் துரைமுருகனுடன் தேமுதிக நிர்வாகிகள் சிலர் நடத்திய பேச்சுவார்த்தை திமுகவால் அம்பலப்படுத்தப்பட்டு அதிமுகவாலும் ஓரம் கட்டப்பட்ட நிலையில் தத்தளிக்கிறது.
இதனால் அதிமுகவுடன் கூட்டணியா?தனித்துப் போட்டியா? என்பது குறித்து தேமுதிக உயர் மட்டக் குழுவினருடன் பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்திலும் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
கூட்டம் முடிந்த பின் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன், முருகேசன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது எல்.கே.சுதீஷ் கூறுகையில், ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி தொடர்பாக பாஜக தரப்புடன் மட்டுமே பேச்சு நடத்தி வந்தோம். இதனை அதிமுக தரப்புக்கும் தெரிவித்து விட்டோம். ஆனால் பாமகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்த நேரத்தில் எங்களையும் அழைத்து அதிமுக பேசாதது எங்களுக்கு வருத்தமாகிவிட்டது.
மக்களவைத் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும். கட்சியில் உள்ள 100 சதவீத நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையாக உள்ளோம் என்று எல்.கே.சுதீஷ் தெரிவித்தார். இதனால் இன்னும் 2 நாட்களுக்கு தேமுதிக கூட்டணி சஸ்பென்ஸ் நீடிக்கும் என்பது உறுதி