அன்புமணி ராமதாஸின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால் காடுவெட்டி குரு அழித்தொழிக்கப்பட்டார் என அவரது மகன் கனலரசன், சகோதரி மீனாட்சி, தாயார் கல்யாணி அம்மாள் மூவரும் கூட்டாக அளித்த பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் மூவரும் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காடுவெட்டி குருவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. குருவின் மரணம் இயற்கையானதே அல்ல.
பாட்டாளி மக்கள் கட்சியின் சூழ்நிலைக் கைதியாகவே காடுவெட்டி குரு இருந்து வந்தார். அவர் அன்புமணி ராமதாஸின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தார்.
இந்த ஒரு காரணத்தினால்தான் படிப்படியாக காடுவெட்டி குழு அழிக்கப்பட்டார். காடுவெட்டி குருவுக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.
ஆனால் குருவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லாமல் தடுத்துவிட்டார் அன்புமணி ராமதாஸ். காடுவெட்டி குருவின் மரணத்துக்கு நீதி வேண்டும்.
இவ்வாறு மூவரும் கூறினர்.
லோக்சபா தேர்தலில் அன்புமணி போட்டியிட்டால் அவரை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் நிறுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தது.