சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதற்கு, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தென் மாவட்ட மக்கள் கொண்டாடும் சித்திரைத் திருவிழா நாளில் மக்களவைக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் உள்பட பொதுமக்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி தேர்தலை வேறு தேதியில் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேர்தல் தேதியை மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பார்த்தசாரதி என்பவரும் நேற்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் நடந்த விசாரணையில் தேர்தல் தேதியை மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் அறிவித்தபடி உரிய தேதியில் தேர்தல் நடத்தப்படும். தேதியை மாற்ற முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மீண்டும் பரிசீலித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் முடிவை அறிவிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.