பாலியல் விவகாரத்தில் சிக்கி 11 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உத்தரவாதம் தர முன்வராததால் சிறையிலிருந்து வெளியில் வர முடியாமல் தவிக்கிறார்.
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தவறான பாதையில் அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.
வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் மூவருக்கும் பல முறை ஜாமீன் மறுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் சென்று முருகனும், கருப்பசாமியும் ஜாமீன் பெற்று வெளியில் வந்து விட்டனர். ஆனால் நிர்மலாதேவிக்கு ஜாமீன் கொடுக்க அரசுத் தரப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
நிர்மலாதேவியை வெளியே விட்டால் வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய அரசியல் புள்ளிகள் பலரை அடையாளம் காட்டி விடுவார் என்பதால் ஜாமீன் மறுக்கப்படுகிறது. சிறையில் அவருடைய உயிருக்கும் ஆபத்து என்று நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும் பொன் பாண்டியன் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிர்மலாதேவிக்கு ஜாமீன் கேட்டு மனுச் செய்தார். ஜாமீன் வழங்க தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? என அரசுத் தரப்பை கடுமையாக சாடிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடந்த 12-ந் தேதி பேராசிரியை நிர்மலாேதவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
ஜாமீன் வழங்கி 3 நாட்கள் ஆகியும் நிர்மலாதேவி இன்னும் சிறையை விட்டு வெளியே வர முடியாமல் திண்டாடுகிறார். ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் இருவர் ஜாமீன் உத்தரவாதம் கொடுத்தால் தான் வெளியில் வரமுடியும். ஆனால் கணவர், பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்த நிர்மலாதேவிக்கு உதவ உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. போலீசாரும் ஜாமீன் கொடுக்க முன் வருபவர்களை தடுப்பதாகவும் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்ததோடு, நிர்மலாதேவி விரைவில் சிறையிலிருந்து வெளியில் வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.