மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பங்கேற்பார்.. ஆனால் பேச மாட்டார் என்று அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக உடல் நிலை பாதிக்கப்பட்ட தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், கடைசியாக அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளார். உடல் நிலை தேறியிருந்தாலும் பேச மிகவும் சிரமப்படுகிறார். தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கட்சியினரிடம் கூட சைகை மூலமே விஜயகாந்த் நேர்காணல் நடத்தினார். இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் ஈடுபடுவாரா? பழைய கம்பீரக் குரலை கேட்க முடியாதா? என்ற கவலை தேமுதிகவினருக்கும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சியினருக்கும் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டி கொடுத்துள்ளார். விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களில் பங்கேற்பார். ஆனால் பேச மாட்டார். விஜயகாந்த் பிரச்சார மேடையில் அமர்ந்து கை அசைத்தாலே தொண்டர்களுக்கு சந்தோஷம் தான் என்று சுதீஷ் தெரிவித்துள்ளார்.