ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை வடிவிலான கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொந்தளித்துள்ளார். கைச்சின்னம் என்பதற்காக உடம்பிலிருந்து கையை வெட்ட முடியுமா? தினமும் உதிக்கும் சூரியனை மறைப்பீர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை.
தேர்தல் அறிவிப்பு வெளியானதால் தேர்தல் நன்னடத்தை விதிகளை அதிகாரிகள் அமல்படுத்தி வருகின்றனர். பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ், பேனர், கட் அவுட்டுகள் என அனைத்தையும் தேர்தல் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் அகற்றி வருகின்றனர்.
இதே போல ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் வரையப்பட்டிருந்த தாமரை வடிவிலான கோலங்களையும் தேர்தல் அதிகாரிகள் அழித்தனர். இதற்கு பாஜக தரப்பிலும், இந்து அமைப்புகள் தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரும் கொந்தளித்துள்ளார். பக்தி நோக்கத்தில் மகாலட்சுமி தேவி அமர்ந்துள்ள தாமரையை அழித்தது என்ன நியாயம்? இந்து மத பழக்கங்களையும், உணர்வுகளையும் அதிகார வர்க்கத்தின் பெயரால் தேர்தல் அதிகாரிகள் புண்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்ற தமிழிசை, கைச்சின்னம் என்பதற்காக உடம்பில் இருந்து கையை வெட்டுவீர்களா? இல்லை உதயசூரியன் என்பதற்காக தினமும் உதிக்கும் சூரியனைத் தான் உங்களால் மறைக்க முடியுமா? என்று தேர்தல் அதிகாரிகளை ஏகத்துக்கும் எகிறியுள்ளார் தமிழிசை சவுந்திரராஜன்.