கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் ஓராண்டாக சிறையில் இருக்கும் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி நாளை ஜாமீனில் வெளிவருகிறார்.
வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று அடுக்கடுக்காக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரி கேள்வி கேட்க, அரசுத் தரப்பு ஆட்சேபணையை கைவிட்டது. இதனால் நிர்மலாதேவிக்கு கடந்த12-ந்தேதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நிர்மலாதேவிக்கு ரத்த சம்பந்பப்பட்ட உறவின ர்கள் 2 பேர் ஜாமீன் உத்தரவாதத்தில் கையெழுத்திட்டால்தான் வெளியில் வர முடியும். ஆனால் உறவினர்கள் யாரும் முன்வராததால் ஒரு வாரத்திற்கும் மேலாக சிறையிலேயே முடங்கிக் கிடந்தார். ஒரு வழியாக இன்று உறவினர்கள் 2 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவிக்கு உத்தரவாதம் கொடுத்ததைத் தொடர்ந்து நாளை வெளி வருவார் என அவருடைய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.