பாஜக வேட்பாளர்கள் பெயரை தன்னிச்சையாக அறிவித்த எச்.ராஜாவின் முந்திரிக் கொட்டைத்தனத்தால் கொந்தளிப்பில் உள்ளாராம் தமிழிசை. சிவகங்கை தொகுதியை ராஜாவுக்கு ஒதுக்கவே கூடாது என்று மேலிடத்திடம் தமிழிசையுடன் சேர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் கண்டிப்பு காட்டி வருவதால் வேட்பாளர் பட்டியல் வெளியாவது இழுபறியாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு குமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி, குமரிக்கு தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட கட்சியில் எதிர்ப்பு இல்லை. ஆனால் மேலிடத்தின் செல்வாக்கால் சிவகங்கையை கைப்பற்ற எச்.ராஜா முயற்சிக்க, தமிழக பாஜக தரப்பினருடன் அதிமுக தலைவர்களும் அவருக்கு எதிர்ப்பு காட்டியுள்ளனர். ஒரு பக்கம் கோவை அல்லது ராமநாதபுரம் கொடுங்கள் என்று வானதி சீனிவாசன் அடம் பிடிக்க பட்டியல் வெளியாவது தள்ளிக் கொண்டே போகிறது லோக்சபா தேர்தல் 2019 ஆண்டில்.
ஒரு வழியாக நேற்று இரவுக்குள் வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் போகிற போக்கில் இன்னார் தான் வேட்பாளர்கள் என்று எச்.ராஜா சிவகங்கையில் தன் பெயரையும் சேர்த்து அறிவித்தது உடனே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.
பாஜக மேலிடமோ, மேலிடப் பொறுப்பாளரோ, தமிழக தலைவரோ வெளியிட வேண்டிய அறிவிப்பை செய்ய எச்.ராஜா யார்? என்று கொந்தளித்துள்ளார் தமிழிசை. இதன் பின்னரே அரை மணி நேரத்தில் தான் கூறியிருந்ததில் இருந்து பின் வாங்கி பட்டியலை மேலிடம் அறிவிக்கும் என்று எச்.ராஜா விளக்கமளித்தார்.
எச்.ராஜா செய்த முந்திரிக்கொட்டைத் தனம் இப்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளதாம். ஏற்கனவே அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி பாஜகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வரும் எச்.ராஜாவுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர்கள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு காட்டி வருகின்றனராம். குறிப்பாக தமிழிசை, எச்.ராஜாவுக்கு நோ சீட் என்று மேலிடத்திடம் கொந்தளித்துள்ளாராம். இதனால் பட்டியலில் சிவகங்கை தொகுதி சார்பாக எச்.ராஜாவின் பெயர் இடம் பெறாது என்று தமிழக பாஜக தலைகள் அடித்துச் சொல்கின்றனர்.