இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்த வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.முதல் இடத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தட்டிச் சென்றுள்ளார்.சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்என்எஸ் செய்தி நிறுவனம் சார்பில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களின் செயல்பாடு குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதில இந்தியாவிலேயே தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவருமான கே.சி. சந்திரசேகர் ராவின் செயல்பாடுகள் சிறப்பாகவும், மனநிறைவு அளிப்பதாகவும் வாக்காளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 68 சதவீதம் பேர் சந்திரசேகர் ராவ் நிர்வாகம், செயல்பாடு மனநிறைவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் 2-வது இடத்திலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது இடத்திலும், கர்நாடக முதல்வர் குமாரசாமி 5-வது இடத்திலும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் 6 -வது இடத்திலும் உள்ளனர்.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோரின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மிகக்குறைந்த அளவு மனநிறைவு அளிக்கும் வகையில் செயல்பட்ட முதல்வர்கள் வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடைசி இடம் பெற்று மோசமான சாதனை படைத்துள்ளார்.
மேலும் தற்போதைய மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது