தேர்தல் ஆணையம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒருதலைப் பட்சமாகவும், பாரபட்சமாகவும் செயல்பட்டு, தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகள் கூறி மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சி போல் தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரியைப் பூசுவதா? என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியில் கைரேகை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள், தாங்கள் ஏற்கனவே போட்டியிட்ட சின்னங்களை கேட்டால் மறுப்பதும், பாஜக-அதிமுக கூட்டணியில் உள்ள அங்கீகாரத்தை இழந்த கட்சிகளுக்கு கேட்பதற்கு முன்பே தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்குவது ஜனநாயகப் படுகொலை இல்லையா? என்றும் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.