ஒரு கிராமத்துக்கு இருவரும் போவோம். நாம் இருவரில் யாருக்கு கூட்டம் அதிகமாக வருகிறது. யாருக்கு செல்வாக்கு அதிகம் என நிரூபிப்போமா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அக்கட்சிக்கு ஆதரவாக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்திற்கு செல்லுமிடமெல்லாம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது, கதை சொல்வது, எதிர்க் கூட்டணிக்கு சவால் விடுவது என கலக்கி வருகிறார்.
சேலம் மல்லூரில் இன்று பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஒத்தைக்கு ஒத்தையாக வந்து செல்வாக்கை நிரூபிக்கத் தயாரா? என்று சவால் விட்டுள்ளார்.
கலைஞரின் பேரன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் நான். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து நான் சவால் விடுகிறேன். நீங்கள் முதல்வர், நான் திமுகவின் சாதாரண தொண்டன்.
தமிழ்நாட்டிலுள்ள ஏதாவதொரு குக்கிராமத்தை நீங்களே தேர்வு செய்யுங்கள். இருவரும் அங்கு செல்வோம். மக்கள் உங்களிடம் வருகிறார்களா? அல்லது என்னை நோக்கி வருகிறார்களா? என்பதை பார்ப்போம். இந்த சவாலை ஏற்க நீங்கள் தயாரா? என்று உதார் காட்டினார்.
கலெக்ஷன். .. கரப்ஷன்... கமிஷன்... ஆகியவற்றை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு அதிமுக ஆட்சி செயல்படுகிறது. சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டமே அதற்கு உதாரணம். இந்த திட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது திமுக. இரண்டவாவதாக எதிர்ப்பு தெரிவித்தவர் அன்புமணி ராமதாஸ்.
அம்மா வழியில் ஆட்சி என்கின்றனர். ஆனால், அந்த 'அம்மா' எப்படி இறந்தார் என்பதை கடைசி வரை சொல்லவில்லை. 90 நாட்கள் அப்பல்லோவில் வைத்து, யாரையும் பார்க்க விடாமல் செய்தனர். ஒரு முதல்வருக்கே பாதுகாப்பில்லாத அரசாங்கம் தான் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது என்று உதயநிதி பேசினார்.