மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், ஒரு கையில் டார்ச், மறுகையில் மைக் பிடித்தபடி ஹைடெக் வாகனத்தில் தென் சென்னை தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சின்னஞ்சிறு கட்சிகளான இந்திய குடியரசுக் கட்சி, வளரும் தமிழகம் கட்சிகளுடன் கூட்டணி வைத்து முதன் முறையாக களம் காண்கிறது.கோவையில் ஹைடெக் பாணியில் பிரமாண்ட மேடையில் வேட்பாளர்கள் அறிமுகம், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கமல், இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கான ஹெடெக் வசதிகளுடன் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட புத்தம் புது வேனில் தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம் பகுதிகளில் கமல் பிரச்சாரம் செய்தார்.
தென் சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரங்க் ராஜன் போட்டியிடுகிறார். வேனில் வேட்பாளர் ரங்கராஜன் தன் பெயர், சின்னம் பொறித்த தட்டியை கையில் பிடித்தபடி நிற்க, கமல் ஒரு கையில் டார்ச் லைட், மறு கையில் மைக் பிடித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கமல்.கமலின் பிரச்சாரப் பயணம் முழுவதும் அக்கட்சியின் மீடியா பிரிவினரால் சினிமா பாணியில் நேரலையாக டுவிட்டரிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.