அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளருக்கு சுயேட்சைகளுக்கு வழங்கப்படும் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் கேட்டுப் போராடிய குக்கர் சின்னமும் பல தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகாவுக்கு முதலில் சைக்கிள் சின்னத்தை நிபந்தனையுடன் தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது. ஆனால் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாகக் கூறி விட்டு ஒரு தொகுதியில் மட்டுமே தமாகா போட்டியிடுவதால் சைக்கிள் சின்னம் பறிபோனது. இதனால் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன் சின்னங்கள் ஒதுக்கீட்டின் போது தமாகாவுக்கு சுயேட்சை சின்னமான ஆட்டோ ஒதுக்கப்பட்டது.
அதே போன்று டிடிவி தினகரனின் அமமுகவுக்கு மறுக்கப்பட்ட குக்கர் சின்னம் சுயேட்சைகள் பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது.மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞரான பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருச்சி மக்களவைத் தொகுதி, இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தூர் தொகுதிகளிலும் சுயேட்சைகளுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.