தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 39 மக்களவைத் தொகுதிகளில் 845 பேரும், 18 சட்டப்பேரவை தொகுதிகளில் 269 பேரும் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுடன் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி முடிவடைந்தது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 27-ந் தேதி நடந்தது. மக்களவைத் தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட 1576 வேட்பு மனுக்களில் 937 மனுக்கள் ஏற்கப்பட்டன. 639 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 514 வேட்புமனுக்களில், 305 மனுக்கள் ஏற்கப்பட்டன. 209 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
நேற்று மாலை 3 மணி வரை வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி 39 மக்களவைத் தொகுதிகளில் 779 ஆண்கள், 65 பெண் கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில், அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 பேரும், தென்சென்னையில் 40 பேரும் களம் காண்கின்றனர். பெண் வேட்பாளர்களை பொறுத்தவரை அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 5 பேர் போட்டியிடுகின்றனர். தென்சென்னை தொகுதியில் மட்டும் ஒரே ஒரு மூன்றாம் பாலின வேட்பாளர் போட்டியிடுகிறார்.
இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் 241 ஆண், 28 பெண் என மொத்தம் 269 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 40, சாத்தூர் தொகுதியில் 30 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அந்தந்த தொகுதி களின் தேர்தல் நடத்தும் அதிகாரி கள், சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணியை தொடர்ந்தனர். டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர் களுக்கு தேர்தல் ஆணையமே பரிசுப் பெட்டி சின்னத்தை பொதுவான சின்னமாக ஒதுக்கியதால், அந்த வேட்பாளர்களுக்கு அந்த சின்னம் ஒதுக் கப்பட்டது. மீதமுள்ள 157 சுயேச்சை சின்னங்களில், அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ சார்பில் போட்டியிடும் மத்தியசென்னை வேட்பாளர் தெஹ்லான் பாகவிக்கு மட்டும் காஸ் சிலிண்டர் சின்னமும், அதிமுக கூட்டணியில் தஞ்சையில் போட்டியிடும் தமாகா வேட்பாளருக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னமும் ஒதுக்கப்பட்டது. அமமுக சார்பில் கோரப்பட்டிருந்த குக்கர் சின்னம், பல தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இங்கு18 பேர் போட்டியிடுகின்றனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு முடிந்த நிலையில் இன்று முதல் முக்கியக் கட்சி வேட்பாளர்களுடன் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் குதிக்க தயாராகி விட்டனர்.