கேரளா ஸ்டைலில் வேஷ்டி, சட்டை அணிந்து சகோதரி பிரியங்காவுடன் வந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
உ.பி.யின் அமேதி தொகுதியில் தொடர்ந்து 3 முறை வென்ற ராகுல் காந்தி இம்முறையும் அங்கு போட்டியிடுகிறார். தென் மாநிலங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என காங்கிரசார் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியை தேர்வு செய்தார். இதனால் வயநாடு தொகுதி தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வயநாடு தொகுதியில் வரும் 23-ந் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்றே கடைசி நாளாகும். இதனால் ராகுல் காந்தி இன்று காலையிலேயே விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தார். பின்னர் ஹெலிகாப்டரில் தமது சகோதரி பிரியங்காவுடன் வயநாடு சென்றார்.
கேரள பாணியில் பளீச் வெள்ளை நிற வேட்டி, சட்டையில் வயநாடு வந்த ராகுலுக்கு செண்டை மேளம் முழங்க காங்கிரசார் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதன் பின்னர் வயநாடு ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வருகையால் வயநாட்டில் காங்கிரசார் பெருமளவில் திரண்டிருந்தனர்.