மோடியின் சுய சரிதைப் படமான 'பிஎம் நரேந்திர மோடி' நாளை வெள்ளித்திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் சுய சரிதையை சந்தீப் சிங் என்பவரின் தயாரிப்பில், 'பிஎம் நரேந்திர மோடி' என்ற திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியாக பிரபல பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் நடிக்க, இந்தப் படத்தை ஓமங்குமார் என்பவர் இயக்கியிருந்தார்.
மக்களவைத் தேர்தலை குறி வைத்து அவசர அவசரமாக தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியானது. இதில் தேர்தல் ஆதாயத்திற்காக பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, தேர்தலுக்கு முன் படத்தை வெளியிடக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.
மேலும் உச்ச நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்கில், வரும் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சந்தீப் சிங், நரேந்திர மோடி சுய சரிதைப் படம் நாளை ரிலீஸ் செய்யப்படாது என்றும், ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்ததாக டிவிட்டரில் அறிவித்துள்ளார்.