தமிழகத்தில் 128 கோடி ரூபாய் 989 கிலோ தங்கம் பறிமுதல்!! சத்யப்பி்ரதா சாஹூ தகவல்

In tamilnadu so far election task forces seized rs.128 crores cash and rs.284 crore worth gold and gifts

by எஸ். எம். கணபதி, Apr 11, 2019, 13:10 PM IST

தமிழகத்தில் இது வரை தேர்தல் பறக்கும் படைகள் நடத்திய சோதனைகளில் ரூ.127 கோடியே 66 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகளில் ரூ.50.03 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சத்யப்பிரதா சாஹூ, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மக்கள் வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை தவிர ஆதார், நூறு நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை, வங்கி பாஸ்புத்தகம், பாஸ்போர்ட் உள்பட 11 அடையாள ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் அனுமதித்திருக்கிறது.

தமிழகத்தில் 5 கோடியே 90 லட்சம் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவிருக்கிறார்கள். 39 மக்களவை தொகுதிகளில் 845 வேட்பாளர்களும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபைத் தொகுதிகளில் 269 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

மாநிலத்தில் தேர்தல் பறக்கும் படைகள் நடத்திய சோதனைகளில் ரூ.127 கோடியே 66 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகளில் ரூ.50.03 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த ரூ.127.66 கோடியில் உரிய ஆவணங்களை காட்டியவர்களுக்கு ரூ.62.24 கோடி திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, ரூ.284 கோடி ரூபாய் மதிப்பில், 989 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி உட்பட இதரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

இது வரை 4185 தேர்தல் புகார்கள் வந்துள்ளன. இவற்றின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் தேர்தலுக்காக ஒரு லட்சத்து 50,302 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இதே போல், வாக்குப்பதி கட்டுப்பாட்டு கருவிகள் 89,160ம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் விவிபாட் இயந்திரங்கள் 94,653ம் தயார் நிலையில் உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஒரு சட்டசபைத் தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியாவது அனைத்து பெண்கள் வாக்குச்சாவடியாக இருக்கும். 7,780 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு மத்தியரிசர்வ் படையினர் நிறுத்தப்படுவார்கள். மேலும், வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ எடுக்கப்படும். 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தி நேரடியாக தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க வகை செய்யப்படும்.

தேர்தல் பணியில் உள்ளவர்களுக்காக இது வரை 4 லட்சத்து 8973 தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சத்யப்பிரதா சாஹூ தெரிவித்தார்.
அவர் பேட்டியின் போது, வாய்பேச இயலாதவர்களுக்கான சைகை மொழியில் ஒருவர் அதை திருப்பிச் சொன்னார். இப்படி சைகை மொழியில் மொழிபெயர்ப்பது இதுவே முதல் முறையாகும்.

You'r reading தமிழகத்தில் 128 கோடி ரூபாய் 989 கிலோ தங்கம் பறிமுதல்!! சத்யப்பி்ரதா சாஹூ தகவல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை