அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் களம் காணும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி சற்று முன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
முன்னதாக ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த நிலையில், பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்பு மனுத் தாக்கலை முன்னிட்டு, அவருடைய ஜுபின் இரானி அமேதியில் பிரம்மாண்ட யாக பூஜை ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். காலை முதல் நடந்த யாக பூஜை பூர்த்திய அடைந்ததைத் தொடர்ந்து, 62 கி.மீ., பாஜக தொண்டர்கள் புடை சூழ ஸ்மிரிதி இரானி வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய சாலை மார்க்கமாக ஊர்வலம் சென்றார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஸ்மிரிதி இரானிக்கு தனது வாழ்த்துக்களைக் கூறினார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி படுதோல்வியை சந்தித்தார்.
ஆனால், பாஜக வெற்றி பெற்ற கடந்த 5 ஆண்டுகளில் அமேதி தொகுதிக்கு அடிக்கடி வருகைத் தந்து, அந்த தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து தனது பலத்தை பெருக்கும் முயற்சியில் ஸ்மிரிதி ஈடுபட்டதன் விளைவாக, இம்முறையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து அவர் களமிறக்கப்படுகிறார்.
இதே போல ரேபரேலியில், இன்னும் சற்று நேரத்தில் சோனியா காந்தி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார். அவரும் மக்களிடையே ஊர்வலமாக வந்து கொண்டிருக்கிறார்.