2016 தேர்தலில் ரூ.650 கோடி பிடிபட்டதற்கு நடவடிக்கை எங்கே? மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

Dmk President mk Stalin questions EC, what action taken on Rs 650 crores seized by IT in 2016

by Nagaraj, Apr 14, 2019, 10:56 AM IST

2016 சட்டமன்றத் தேர்தலின்போது 650 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் அதிமுக வேட்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தும் வருமானவரித்துறையும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே அதிமுக லஞ்சம் கொடுத்து கொள்முதல் செய்த அதிர்ச்சித் தகவல்களை தி வீக் ஆங்கில வார இதழ் வெளியிட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோர், எஸ்.ஆர்.எஸ். மைனிங் எனும் கம்பெனி மூலம் தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களுக்கு 650 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை விநியோகித்ததற்கான ஆதாரங்கள் வருமானவரித் துறையிடம் கிடைத்திருப்பதாக வீக் இதழ் குறிப்பிட்டுள்ளது என மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த ஆதாரங்களில், சட்டமன்றத் தொகுதியின் பெயர்கள், வாக்குச்சாவடி, வாக்காளர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்கள், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், குறித்து வைத்திருந்த கணக்கு புத்தகங்கள், ரகசிய பண விநியோகப் பட்டியல் என அனைத்தும் கிடைத்துள்ளது. நடிகர் சரத்குமாருக்கு 2 கோடி ரூபாய் கொடுத்தது குறித்து கையெழுத்துடனான ஆதாரம் வருமான வரித்துறையிடம் பிடிபட்டிருக்கிறது.

இந்த ஆதாரங்கள் வருமான வரித்துறையின் புலனாய்வுத்துறை டைரக்டர் ஜெனரலுக்கு 2017-ம் ஆண்டு மே மாதமே அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிடிபட்ட ஆதாரங்கள் எங்கே என்றும், அதன் மீது வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் அறிக்கையில் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது 89 கோடி ரூபாய் பிடிபட்டதும், கரூர் அன்புநாதன் உள்ளிட்டோர் வீடுகளில் அடுத்தடுத்து நடந்த வருமானவரித்துறை சோதனை போன்றவற்றின் மூலம் அதிமுகவை பாஜக மிரட்டி கூட்டணி வைத்திருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 பேரின் மீதும் தேர்தல் ஆணையம் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமெனவும் மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

You'r reading 2016 தேர்தலில் ரூ.650 கோடி பிடிபட்டதற்கு நடவடிக்கை எங்கே? மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை