வாக்காளர் பட்டியலில் ஓட்டைக் காணோம்..! விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த டிராவிட்டுக்கே நேர்ந்த அவலம்

Loksabha election, ex cricketer Rahul Dravid name missed in the voter list

by Nagaraj, Apr 14, 2019, 12:38 PM IST

ஜனநாயகக் கடமையாற்ற அனைவரும் வாக்களியுங்கள் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் காப்டன் ராகுல் டிராவிட்டுக்கே வாக்கு இல்லாமல் போன அவலம் நடந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 18-ந் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. பெரும்பாலான வாக்காளர்கள் கடைசி நேரத்தில் தான் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைக் காணவில்லை என்று அய்யோ.. அய்யோ... என்று கூச்சலிடுவது நமது நாட்டில் பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது.

இப்படி நடப்பதைத் தவிர்க்கவும், அனைவரையும் வாக்களிக்கச் செய்யவும் நமது தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடுகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்து வருகிறது. விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மக்களை எளிதில் சென்றடைய அதற்காக பிரபலங்களை ஈடுபடுத்துகிறது.

இது போன்று உங்கள் வாக்குகளை அளியுங்கள், ஜனநாயகத்தை வெற்றியடையச் செய்யுங்கள் என்று ராகுல் டிராவிட் விளம்பரப்படுத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு தேர்தலிலும் முறையாக தன் வாக்கைப் பதிவு செய்தவர் என்ற அடிப்படையில் கர்நாடகா தேர்தல் ஆணையம் இவரை தூதராக நியமித்தது.

இப்போது, அவருக்கே ஓட்டு இல்லாமல் போன அவலம் இப்போது தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திரா நகர் 12-வது மெயின் ரோட்டில் ராகுல் டிராவிட் வசித்து வந்தார்.இது சாந்திநகர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ளது. தற்போது அவர் பெங்களூருவின் அஷ்வத் நகர் பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டதால்
டிராவிட்டின் சகோதரர் விஜய் மூலம் ஃபார்ம் 7 என்ற பெயர் நீக்க படிவத்தை அளித்துள்ளார். இதனையடுத்து டிராவிட், அவருடைய மனைவி விஜேதா ஆகிய இருவரின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் நீக்கிய பிறகு சேர்ப்பதற்கான ஃபார்ம் 6-ஐ டிராவிட் அளிக்கத் தவறிவிட்டார். இதனால் டிராவிட் தற்போது குடியிருக்கும் பகுதியில் ஓட்டு இல்லாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

பெயரை நீக்க படிவம் வழங்கிய டிராவிட், சேர்க்க மறந்துவிட்டது தற்போது தான் தெரிய வந்துள்ளது . இது தங்களுக்கே பெரிய அதிர்ச்சியாக உள்ளது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

You'r reading வாக்காளர் பட்டியலில் ஓட்டைக் காணோம்..! விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த டிராவிட்டுக்கே நேர்ந்த அவலம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை