அமமுகவுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருவதை துரோகிகளாலும், எதிரிகளாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகமெங்கும் அமமுகவுக்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகி வருவதை துரோகிகளாலும், எதிரிகளாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வன்முறையைக் கையிலெடுத்து அதன் மூலம் அமமுகவில் இருக்கிற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களை அச்சுறுத்த நினைக்கிறார்கள்.
அப்படித்தான் ஓசூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் புகழேந்தியின் பிரச்சார வாகனத்தை அடித்து உடைத்திருக்கிறார்கள்.தேன்கனிக்கோட்டை சாலையில் வைத்து, இரு சக்கர வாகனத்தில் கையில் நீண்ட கத்திகளோடு வந்தவர்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக வேட்பாளர் அப்போது வாகனத்தில் இல்லாததால், உயிர் தப்பி இருக்கிறார்.
தோல்வி பயத்தால் இப்படி வன்முறையைக் கையிலெடுப்பவர்களுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் களத்தில் உள்ள அமமுக உடன்பிறப்புகள் வன்முறையாளர்களிடம் கவனமாக இருந்திட வேண்டும் என, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.