தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.
பிரபலங்களும் அரசியல் தலைவர் களும் வரிசையில் நின்று வாக்களித்து வருவதை காண முடிகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன் சொந்த ஊரான எடப்பாடியில் மக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜீத் உள்ளிட்ட திரையுலகினரும் காலையிலேயே வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர்.
எந்த அசம்பாவிதமும் இன்றி காலையில் வாக்குப்பதிவு அமைதியாக தொடங்கினாலும், வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படாதது, மின் வெட்டு போன்ற பிரச்னைகளால் பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்ப்ட்டது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாக்களிக்க இருந்த தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை வாக்குச்சாவடியில் மின்வெட்டு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது .இதனால் கமல் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்தார். துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாக்களிக்க இருந்த பெரியகுளம் வாக்குச் சாவடியில் மின்னணு வாக்கு எந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு தாமதமானது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்கு எந்திரக் கோளாறுகளால் வாக்குப்பதிவு தொடங்க தாமதமாகி நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தனர்.