தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் சேர்த்து நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை முதல் குமரி வரை பல ஊர்களில் வாக்கு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ நிருபர்களிடம் கூறியதாவது:
காலை 11 மணி வரை தமிழகம் முழுவதும் 20 முதல் 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக, ஆரணியில் 36.5 சதவீதம் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 33.36 சதவீதமும், தென்சென்னையில் 23.87 சதவீதமும், மத்திய சென்னையில் 22.89 சதவீதமும், மதுரையில் 25.41 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள 66,167 வாக்குச்சாவடிகளிலும் காலை 6 மணிக்கு சோதனை வாக்குப்பதிவு மேற்கொண்டோம். இடைத்தேர்தலும் சேர்த்து நடைபெறும் இடங்களில் காலை 5.30 மணிக்கு இந்த சோதனை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அப்போது 305 வாக்கு இயந்திரங்கள், 525 விவிபாட் இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை. அவற்றை உடனடியாக மாற்றி விட்டோம்.
இதே போல், இயந்திரங்களில் பழுது ஏற்பட்டிருந்தால் உடனுக்குடன் இயந்திரங்கள் மாற்றப்பட்டன. தற்போது எங்குமே வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை. இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் 20 நிமிடங்களுக்குள் அவற்றை மாற்றி விடுகிறோம். எனவே, எந்தப் பிரச்னையும் இல்லை.
பூத் சிலிப் கொடுக்காததால் வாக்காளர்கள் தங்கள் பூத்களை கண்டுபிடிக்க முடியாமல் வாக்குப்பதிவு தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. ஆனால், வாக்களிப்பதற்கு பூத் சிலிப் தேவையே இல்லை. அரசியல் கட்சியினரிடம் வாக்காளர் பட்டியல்களை அளித்திருக்கிறோம். அவர்களிடம் பூத் எது என்று அறிந்து கொண்டு வாக்களிக்கச் செல்லலாம்.
இவ்வாறு சத்யப்பிரதா சாஹூ கூறினார்.