மின்னணு வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவின் தாமரை சின்னத்திற்கே ஓட்டுப் பதிவாகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று பரபரப்பாக மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எந்தவித அசம்பாவிதம் இன்றி நடந்து வருகிறது. மதியம் 1 மணி நேர நிலவரப்படி 39.49% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ கூறினார்.
இந்நிலையில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜக மிகப்பெரிய மோசடி செய்துள்ளது என்றார். மேலும், எந்த பட்டனை அழுத்தினாலும், பாஜகவின் தாமரை சின்னத்திற்கே வாக்குகள் செல்வதாகவும், பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு வாக்குகள் செல்வதாகவும் திருமா குற்றம்சாட்டினார்.
இதே குற்றச்சாட்டை ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நவாஸ்கனியும் கூறியுள்ளார்.
சாயல்குடியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றுக்கு பார்வையிட சென்ற அவர், அங்குள்ள வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவிற்கே வாக்குகள் செல்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக இந்த தேர்தலில் செயல்படுவது ஜனநாயக படுகொலை என்றும் கூறினார்.