வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, நேற்று பிரமாண்ட பேரணி ஒன்றை அங்கு நடத்தினார். அப்போது சாலையை கழுவி சுத்தம் செய்வதற்காக மட்டும் 1.5 லட்சம் லிட்டர் குடிநீரை பயன்படுத்திய பகீர் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னதாக வாரணாசியில் நேற்று பாஜக சார்பில் பிரமாண்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் பாஜகவின் கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய மகன் ரவீந்திரநாத் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்தப் பேரணிக்கு முதல் நாள் இரவில், வாரணாசி நகரின் முக்கியச் சாலைகள் அனைத்தும் பளிச்சென இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளனர். வாரணாசி மாநகராட்சியின் 400 பணியாளர்கள் இரவு முழுவதும் சாலைகளை தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளனர். இதற்காக மாநகராட்சியின் 40 லாரிகளில் சுமார் 1.5 லட்சம் லிட்டர் குடிநீரை பயன்படுத்தப்பட்டது என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வற்றாத ஜீவநதியான கங்கை ஓடும் ஆற்றங்கரையில் உள்ள வாரணாசியிலும் இன்னமும் குடிநீர் பஞ்சம் தீரவில்லை.30 சதவீத மக்கள் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இன்றி தவிக்கும் சூழல் தான் நிலவுகிறது. இப்படி இருக்கையில் சாலையைக் கழுவ குடிநீரை பயன்படுத்தியது ஏன்? என்ற புதிய சர்ச்சை வாரணாசியில் கிளம்பியுள்ளது.