அரசியலில் இன்று ஆளுங்கட்சியில் இருப்பவர் நாளை எதிர்க்கட்சியிலும் நாளை மறுநாள் மீண்டும் ஆளுங்கட்சிக்கே திரும்புவது வழக்கம். அதுபோன்ற சதுரங்க ஆட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் தான் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் முதன்மை கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ள முன்னணி வேட்பாளர்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் இணைப்பு பிணைப்பு வளர்ச்சி வீழ்ச்சி என்ற சொந்த நட்பும் பகையும் சேர்ந்தே இருக்கின்றன.
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி:
அரவக்குறிச்சி திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் செந்தில் பாலாஜி. அரவக்குறிச்சியின் வெற்றி வேட்பாளரும் இவர்தான். ஆரம்பத்தில் மதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி பின்னர் 1995ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 1996-ம் ஆண்டு தனக்கு திமுக சார்பில் சீட் கிடைக்கும் என நினைத்த செந்தில் பாலாஜிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், ராமேஸ்வரப்பட்டியில் சுயேச்சையாக நின்று ஒன்றிய கவுன்சிலராக ஜெயித்து திமுகவில் இணைந்தார்.
2000-ம் ஆண்டு, அதிமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி, 2006-ம் ஆண்டு கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். பின்னர் தொடர்ந்து அதிமுகவில் அசுர வேக வளர்ச்சியடைந்த செந்தில் பாலாஜி, ஜெயலலிதா சிறைச்சாலை செல்லும்போது, காபந்து முதலமைச்சர் பட்டியலிலும் இடம்பெற்றார். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அரவக்குறிச்சியில் தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த கே.சி.பழனிசாமியை தோற்கடித்து எம்.எல்.ஏ., ஆனார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் அணிக்குத் தாவிய செந்தில்பாலாஜி, அங்கு தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை அறிந்து கொண்ட செந்தில் பாலாஜி மீண்டும் தாய் கழகமான திமுகவிற்கு தற்போது தாவியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன்:
அதிமுகவில் அசுர வளர்ச்சி அரசியலில் ஈடுபட்டிருந்த போது, கிரானைட் தொழிலதிபரான வி.வி. செந்தில்நாதனை அரசியலுக்கு அழைத்து வந்தார் செந்தில் பாலாஜி. தற்போது அவரையே எதிர்த்து அதிமுக சார்பில் வி.வி. செந்தில்நாதன் களம் காண்கிறார்.
அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜிக்கு அடுத்தபடியாக செல்வாக்கு பெற்ற அரசியல்வாதி மற்றும் பெருஞ்செல்வந்தரான வி.வி. செந்தில்நாதன் தான் செந்தில் பாலாஜியை எதிர்த்து போட்டியிட சரியான ஆள் என எண்ணிய எடப்பாடி பழனிசாமி செந்தில்நாதனை வரும் சட்டமன்றத் இடைத்தேர்தலில் களமிறக்கியுள்ளது.
அமமுக வேட்பாளர் பி.எச். சாகுல் ஹமீது:
அமமுகவில் செந்தில் பாலாஜி இருந்திருந்தால், இன்னேரம் அவர்தான் அமமுக சார்பாக அரவக்குறிச்சியில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பார். அவர் திமுகவுக்கு தாவியவுடன், கோடீஸ்வர வேட்பாளரான சாகுல் ஹமீது என்பவரை டிடிவி தினகரன் களமிறக்கியுள்ளார்.
இந்த சாகுல் ஹமீது என்பவர் முதலில் விஜயகாந்த் கட்சியான தேமுதிகவில் இருந்தார். அவரை, அதிமுக பக்கம் இழுத்து வந்தவர் செந்தில் பாலாஜி தான் தற்போது அவருக்கே எதிராக அமமுக சார்பில் சாகுல் ஹமீது களம் காண்கிறார். அதிமுகவில் செந்தில் பாலாஜி வளர்ந்து வந்த போது, தன்னுடைய தளபதியாக சாகுல் ஹமீதை உருவாக்கினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், டிடிவி தினகரன் கட்சியில் தாவிய செந்தில் பாலாஜி சாகுல் ஹமீதையும் உடன் அழைத்துச் சென்று அமமுகவில் இணைத்தார்.
ஆனால், திமுகவில் சேரும்போது சாகுல் ஹமீது செந்தில் பாலாஜியுடன் வர மறுத்து விட்டார்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜியால் அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்ட இரு வேட்பாளர்கள் அதிமுக மற்றும் அமமுக அணியில் இருந்து அதிமுக மற்றும் அமமுக அணிகளில் இருந்து தாவி திமுக அணிக்குச் சென்ற செந்தில் பாலாஜியை எதிர்க்க உள்ளனர்.
இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் வெற்றியை பெறப் போகிறவர் யார் என்பது தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தெரிந்துவிடும்.