தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி, மக்களவைத் தேர்தலில் 33 தொகுதிகளை கைப்பற்றும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வேலூர் தவிர மற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இந்நிலையில், டெல்லியில் பி.டி.ஐ. செய்தியாளர்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பா.ஜ.க.வின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் பேரழிவுதான் ஏற்பட்டிருக்கிறது. அதனால், மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரவே வராது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ராகுல்காந்தி பிரதமராக வருவாரா என்பதை இப்போது சொல்ல முடியாது.
அதே போல், எந்த எதிர்க்கட்சித் தலைவரும் பிரதமர் பதவி வேண்டும் என்று கேட்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின்பு எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றுகிறதோ அந்த கட்சி பிரதமர் பதவியை கோரலாம். எப்படியும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் பிரதமரை தேர்வு செய்யும். அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மிகப் பெரிய பங்கு இருக்கும். தமிழகத்தில் 33 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும். அதற்கு தேவையான நிதி ஆதாரம் நம்மிடம் உள்ளது. இதை செயல்படுத்துவதால் பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் வராது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.