எஸ்.பி.வேலுமணியா.? செ.ம.வேலுச்சாமியா..? சூலூர் அதிமுகவில் உள்குத்து..! படு உற்சாகத்தில் டி.டி.வி.யின் அமமுக

Sulur Assembly by-election : group politics in admk, ex mayor velusamy supporters works for ammk candidate

by Nagaraj, Apr 30, 2019, 13:32 PM IST

இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் சூலூர் தொகுதியில் இப்போதே வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகின்றனர் டிடிவி தினகரன் தரப்பினர். தமக்கு சீட் தராததற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியே காரணம் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ள செ.ம.வேலுச்சாமி, அதிமுக தேர்தல் பணிகளில் சுத்தமாக ஒதுங்கி விட்டார். மேலும் தமது தரப்பு ஒட்டுமொத்த ஆதரவாளர்களையும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக அப்பட்டமாக களத்தில் இறக்கி விட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர் பெரும் கலக்கத்தில் உள்ளார்.

கோவை சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த கனகராஜ் திடீர் மரணம் காரணமாக அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு அதிமுக வேட்பாளராக கட்சியின் கோவை மாவட்ட முக்கியப் புள்ளியான செ.ம.வேலுச்சாமிதான் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய காலம் முதலே கட்சியில் கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து எம்எல்ஏ, அமைச்சர், மேயர் என உச்சம் தொட்டு கோவை மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் தான் செ.ம.வேலுச்சாமி.

ஆனால் கோவை மாவட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோலோச்சத் தொடங்கியது முதலே, வேலுச்சாமியை ஓரம் கட்டி வந்தவர், இப்போது சூலூர் தொகுதி வேட்பாளராக முடியாதபடியும் கச்சிதமாக காய் நகர்த்தி எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து, இறந்து போன கனகராஜுன் அண்ணன் மகன் கந்தசாமிக்கு வாய்ப்பு கொடுக்கச் செய்து விட்டார்.

இதனால் படு அப்செட்டான செ.ம.வேலுச்சாமி, சூலூர் தொகுதியில் அதிமுகவை தோற்கடித்து, எஸ்.பி வேலுமணியின் கொட்டத்தை ஒடுக்கியே தீருவது என்று கங்கணம் கட்டி, உள்ளடி வேலைகளையும் தொடங்கி விட்டார். முந்தாநாள் நடந்த சூலூர் தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தை புறக்கணித்த செ.ம. நேற்று அதிமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கலிலும் பங் கேற்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார். அது மட்டுமின்றி, தனது ஆதரவாளர்களையும் அமமுக வேட்பாளர் சுகுமாருக்கு ஆதரவாக திசை திருப்பி விட்டுள்ளார்.

இதனால் செ.ம.வேலுச்சாமியின் சொந்த ஊரான சூலுர் தொகுதியில் உள்ள செங்கந்துறை அதிமுக செயலாளரான செந்தில்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு அமமுகவில் ஐக்கியமாகி ஜரூராக பரிசுப் பெட்டி சின்னத்துக்கு வாக்கு கேட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி, இதுவரை அமமுக கொடி பறக்கக் கூட செ.ம.வேலுச்சாமியால் கெடுபிடிக்கு ஆளான செங்கந்துறை மற்றும் கற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட ஊர்களில் அமமுக வேட்பாளர் சுகுமாரை அழைத்துச் சென்று தடபுடலாக வரவேற்பும் கொடுத்து அதிமுக தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறதாம் செ.ம. தரப்பு. மேலும் நேற்று நடந்த வேட்பு மனுத்தாக்கலின் போதும் அதிமுகவுக்கு கூடியதை விட அமமுக பக்கம் திரண்ட கூட்டமும் எக்கச்சக்கமாம்.

இது புறம் என்றால் சமீபத்தில் பாமக மாநிலத் துணைத் தலைவர் பதவியை உதறிவிட்டு அமமுகவில் இணைந்த பொங்கலூர் மணிகண்டனும், திருப்பூர் மாவட்ட அமமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான திருப்பூர் சிவசாமியும் கைகோர்த்து தாங்கள் சார்ந்த கவுண்டர் சமூக சொந்தங்களை அமமுக பக்கம் மடை மாற்றும் வேலையை கனகச்சிதமாக செய்து வருவதால் அதிமுக தரப்பு ஆட்டம் கண்டு போய் உள்ளதாம்.

செ.ம.வேலுச்சாமியின் இந்த உள்குத்து, வேலைகளால் சூலூர் தொகுதியில் இப்போதைக்கு உண்மையான போட்டி என்பது திமுகவின் பலம் வாய்ந்த வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கும் அமமுக வின் சுகுமாருக்கும் தான் என்ற நிலை உள்ளது அப்பட்டமாக தெரிகிறது. ஒரு பக்கம் கோஷ்டிப் பூசல், மறுபக்கம் தினகரன் தரப்புக்கு கட்சியினர் பகிரங்கமாக வேலை பார்ப்பது போன்றவற்றால் சூலூர் தொகுதியில் ஆரம்ப கட்டத்திலேயே அதிமுக திக்குமுக்காடிப் போய் உள்ளது. இதிலிருந்து மீண்டு, வெற்றிக் கோட்டை எட்டுவதற்கான வழி என்ன? என்ற யோசனையில் அதிமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது.

கூடுதல் செய்தியாக, அதிமுகவில் இருந்து தமது ஆதரவாளர்களுடன் வெளியேறும் முடிவுக்கும் வந்து விட்டாராம் செ.ம.வேலுச்சாமி. தினகரன் தரப்புடன் தொடர்பில் இருக்கும் செ.ம.வேலுச்சாமி, அமமுகவில் இணைவது இடைத்தேர்தலுக்கு முன்பா? தேர்தல் முடிவுகள் வந்த பிறகா? என்ற யோசனையில் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வேகம் எடுக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஆவணங்கள், 40 சாட்சிகளின் வாக்குமூலம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு

You'r reading எஸ்.பி.வேலுமணியா.? செ.ம.வேலுச்சாமியா..? சூலூர் அதிமுகவில் உள்குத்து..! படு உற்சாகத்தில் டி.டி.வி.யின் அமமுக Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை