மே 19-ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு கடந்த 22-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி 29-ந் தேதி முடிவடைந்தது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 256 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இதில் 30-ந் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 104 பேரின் மனுக்கள் தள்ளுபடியானது. இன்றும் 15 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த 4 தொகுதிகளிலும் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் மட்டும் 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேரும், சூலூர் தொகுதியில் 22 பேரும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் குறைந்த பட்சமாக 15 பேரும் களம் காண்கின்றனர்.
இந்த 4 தொகுதிகளிலும் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதும் நிலையில், தினகரனின் அமமுகவும் வேட்பாளர்களை நிறுத்தி மல்லுக்கட்டுவதால் கடும் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த 3 கட்சிகளுடன் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் வேட்பாளர்களை நிறுத்தி தங்கள் பலத்தை நிரூபிக்க களத்தில் குதித்துள்ளன.