2 நாளில் பதவி விலக வேண்டும்...இது தான் விதியா..? -ஆந்திர அமைச்சருக்கு வந்த சோதனை

AP minister likely to quit after 6 month limit to get elected as mla

by Nagaraj, May 8, 2019, 21:38 PM IST

பதவி ஏற்று 6 மாதத்தில் எம்எல்ஏ அல்லது எம்எல்சி ஆக வேண்டும் என்ற சட்டப்படி, அது நிறைவேறாமல் போனதால் ஆந்திர அமைச்சர் ஒருவர் 2 நாட்களில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில் கடந்த ஆண்டு நவம்பர் 11-ந் தேதி சுகாதார அமைச்சராக பதவியேற்றவர் கிடாரி சரவண் குமார். அமைச்சராக இருந்த இவருடைய சர்வேஸ்வர ராவ் கடந்த ஆண்டு செப்டம்பரில் நக்சல் தாக்குதலில் கொல்லப்பட்டதால், 29 வயதான கிதாரி சரவன் குமார் அமைச்சராக்கப்பட்டார். அரசியல் அமைப்புச் சட்டப்படி அமைச்சராக பொறுப்பேற்பவர்கள் 6 மாத காலத்தில் எம்எல்ஏவாகவோ, எம்எல்சியாகவோ தேர்வு செய்யப்பட வேண்டும்.

கிதாரி சரவண்குமாரின் தந்தை எம்எல்ஏ இருந்து மறைந்ததால் அவருடைய அரகு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்து விடலாம் என சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆந்திர சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு குறுகிய காலமே இருந்ததால் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவிக்கவில்லை. மார்ச் மாதமே தேர்தல் அறிவிப்பு வெளியானதால் எம்எல்சியாகவும் சரவண்குமாரை தேர்வு செய்ய முடியவில்லை.

தற்போது கடந்த ஏப்ரல் 11-ந் தேதி நடந்து முடிந்த தேர்தலில் அரகு தொகுதியில் சரவண்குமார் போட்டியிட்டிருந்தாலும் முடிவுகள் வரும் 23-ந் தேதி தான் வெளியாக உள்ளது. ஆனால் சரவண்குமார் அமைச்சராக பதவியேற்று 6 மாத காலக்கெடு வரும் 11-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் சட்டப்படி ஓரிரு நாளில் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளார்.

சரியாக நாட்களை கணக்கிட்டுள்ள மாநில ஆளுநர் நரசிம்மனும் மாநில தலைமைச் செயலாளருக்கு இதனை நினைவுபடுத்த, முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி முடிவெடுக்கப் போவதாக சரவண்குமார் அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 2 வாரங்கள் இடைவெளி உள்ள நிலையில் முன்கூட்டியே அமைச்சர் பதவியை இழக்க வேண்டிய நிலைக்கு ஆந்திர அமைச்சர் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 2 நாளில் பதவி விலக வேண்டும்...இது தான் விதியா..? -ஆந்திர அமைச்சருக்கு வந்த சோதனை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை