தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் தனபாலுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் நிச்சயம் உருவாகும் என்று தெரிகிறது. சபாநாயகரின் முடிவே இறுதியானது. அவருடைய அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. சம்மன் அனுப்பினாலும் அதை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமுமில்லை என்று சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீது அதிமுக கொறடா கொடுத்த புகாரில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர் தனபால் . சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளதை காரணம் காட்டி, நடவடிக்கைக்கு தடை கோரி, அறந்தாங்கி ரத்தினசபாபதியும், விருத்தாச்சலம் கலைச்செல்வனும் உச்ச நீதிமன்றம் சென்றனர். இதில் சபாநாயகர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், பதிலளிக்குமாறு அவருக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது.
ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து சபாநாயகர் எந்த ரியாக்ஷனும் இதுவரை காட்டாமல் உள்ளதால் நீதிமன்ற உத்தரவை மதிப்பாரா? மீறுவாரா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஏனெனில் மற்ற எம்எல் ஏக்களுடன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யாத கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, சபாநாயகரிடம் விளக்கம் அளிக்கப் போவதாக சென்ற போது அவர் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த பிரபு, உச்ச நீதிமன்ற தடை தனக்கும் செல்லுமா? அல்லது விளக்கம் கொடுத்தாக வேண்டுமா? என்று சட்டப் பேரவை செயலரிடம் மனுக் கொடுத்ததற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் பிரபுவும் தனியாக உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் நடவடிக்கைக்கு தடை கோரி நேற்று முறையீடு செய்துள்ளார்.
சபாநாயகர் தனபால் தொடர்ந்து மவுனம் சாதிப்பதால், அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும், உச்சநீதிமன்றத்தில் பதிலளிப்பாரா? என்ற கேள்வி எழுந்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது சபாநாயகருக்கே வானளாவிய அதிகாரம் என்று நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக முழக்கமிட்டு பரபரப்பு ஏற்படுத்திய முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், தற்போதைய சபாநாயகருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
தற்போதைய 3 எம்எல்ஏக்கள் விவகாரம் குறித்து பேட்டியளித்துள்ள பி.எச்.பாண்டியன், சட்டப்பேரவை நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சபாநாயகரின் முடிவே இறுதியானது. எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை குறித்து ஆராய்ந்து, சபாநாயகர் எடுக்கும் முடிவே செல்லும்.18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதிலும் சபாநாயகர் உத்தரவே செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது போன்று சபாநாயகர்களின் தீர்ப்பு தான் செல்லும் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன. 1983-ல் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்தேன். எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார்கள். நீதிமன்றமும் எனக்கு சம்மன் அனுப்பியது. அப்போது சபாநாயகருக்கான வானளாவிய அதிகாரங்களை சுட்டிக்காட்டி சம்மனை ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் நான் அளித்த தீர்ப்பே சரி என்று கூறிவிட்டது நீதிமன்றம் . இதனால் சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் சபாநாயகருக்கு கிடையாது என்றும் பி.எச்.பாண்டியன் கருத்து கூறியுள்ளார்.
பி.எச்.பாண்டியனின் கூற்றுப்படி உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, தன்னுடைய அதிகாரத்தை சபாநாயகர் நிலைநாட்டப் போகிறாரா? நீதிமன்றத்துடன் மோதல் போக்கை மேற்கொள்வாரா? என்பதற்கு ஓரிரு நாளில் விடை தெரியப்போகிறது.