சந்திப்பு நடக்குமா? நடக்காதா? என சூடான விவாதங்கள் நடந்தேறிய நிலையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று மு.க.ஸ்டாலினை சந்திப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கே.சி.ஆரின் மாநிலக் கட்சிகளை ஒன்று திரட்டும் 3-வது அணித் திட்டத்திற்கு திமுக பிடி கொடுக்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏறத்தாழ முடிவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது. ஓட்டு எண்ணிக்கைக்கும் இன்னும் பத்து தினங்களே உள்ளன. மத்தியில் இரு பெரும் கட்சிகளான பாஜக மாற்றும் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைப்பது சந்தேகம் தான் என்ற யூகங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மாநிலக் கட்சிகள் மற்றும் உதிரிக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும் என்றே தெரிகிறது.
இதனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரசுக்கு ஆதரவாக எதிக்கட்சிகளை ஒன்று திரட்டப் பார்க்கிறார். இதற்கு மம்தா, மாயாவதி, அகிலேஷ் போன்றோர் ஒத்துழைக்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. தேர்தல் முடிவு வரட்டும், பின்னர் முடிவெடுக்கலாம் என்ற மனநிலையில் அவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் பரம எதிரியான தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், வேறொரு திட்டத்துடன் களத்தில் குதித்துள்ளார். பாஜக, காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகளை ஒன்று சேர்த்து 3-வது அணி அமைக்கும் திட்டம் தான் அது. இதில் இடதுசாரிகளையும் ஒன்றிணைக்கும் திட்டத்துடன் கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனையும் சந்தித்து ஆலோசித்து விட்டார். அப்போதே 13-ந் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் கே.சி.ஆர்.சந்திக்கப் போகிறார் என்ற தகவல் கசிந்தது.
ஆனால் தகவல் கசிந்த சில மணி நேரங்களிலேயே கே.சி.ஆர். தரப்பிலும், திமுக தரப்பிலும் இதற்கு மறுப்பு வெளியானது. கே.சி.ஆர் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு முடிவாகவில்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியானது. இதற்குக் காரணம் திமுகவுக்கு காங்கிரஸ் மேலிடம் கொடுத்த நெருக்கடி தான் காரணம் என்றும் கூறப்பட்டது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு முதன்முதலில் முன்மொழிந்ததே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அப்படியிருக்கையில், பாஜகவுக்கு சாதகமாக கேசிஆர் மறைமுகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், இச்சந்திப்பு ஏன் என்ற கேள்விகள் எழுந்தன. இதனால் கேசிஆர்-மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
ஆனால் மு.க.ஸ்டாலினை கேசி ஆர் இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்திக்கப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்று திடீரென வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கேசிஆரின் 3-வது முயற்சிக்கு திமுக பிடி கொடுக்குமா? அல்லது திமுகவின் திட்டம் தான் என்ன?என்ற கேள்வி எழுந்து தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது மு.க.ஸ்டாலின் - கேசி ஆர் சந்திப்பு என்றே கூறலாம்.