மே.வங்கத்தில் வன்முறையை காரணம் காட்டி தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடிக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தனித்தனியே விதிகளை உருவாக்கியது போல் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மே.வங்கத்தில் இரு தினங்களுக்கு முன் பாஜக தலைவர் அமித்ஷா நடத்திய பிரச்சார பேரணியின் போது வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில், நாளை மாலை முடிவடைவதான் இருந்த தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாகவே இன்று இரவு 10 மணியுடன் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக இப்படி தேர்தல் பிரச்சாரத்தை முன்னதாக முடிக்கச் சொல்வது இதுதான் முதல் முறை. ஆனால் வன்முறையைக் காரணம் காட்டியுள்ள தேர்தல் ஆணையம் , இன்று மே.வங்கத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யும் வரை அவகாசம் வழங்கியதற்கு எதிர்க்கட்சிகள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே இந்தத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒரு தலைப்பட்சமாகவும், பாரபட்சமாகவும் இருப்பதாக ஆரம்பம் முதலே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.மே.வங்க விவகாரத்தில் பிரதமர் மோடிக்காகவே அப்பட்டமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதற்கு அம்மாநில முதல்வர் மம்தா கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளுக்கென்று தனி விதிமுறைகளையும், ஆளுங்கட்சிக்கென்று தனி விதிமுறைகளையும் வைத்துள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.