தமிழகத்தில் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு மற்றொரு டிஜிபியான எஸ்.ஆர்.ஜாங்கிட் கடிதம் எழுதிய விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஜாங்கிட்டின் இந்த எதிர்ப்பின் பின்னணியில், தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் ஆட்சி மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதே காரணம் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உயர் பதவியில் உள்ள ஐஏஎஸ், ஜபிஎஸ் அதிகாரிகளுக்கு அரசியல் சாயம் பூசப்படுவது திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் வழக்கமாகிப் போய்விட்டது. அதிகாரிகளும் திமுக, அதிமுக அணி என பிரித்தே பார்க்கப்படுகின்றனர். இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதிகாரிகள் பந்தாடப் படுவது வழக்கமான ஒன்றாகிப் போவது வாடிக்கையாகி விட்டது.
இதன் படி தேர்தல் நடக்கும் போதே ஆட்சி மாற்றம் நடக்குமா ? என்பதை ஓரளவுக்கு யூகித்து விடும் தற்போதைய ஆட்சியில் டம்மி பதவியில் உள்ள உயர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் திடீரென எழுச்சி பெற்று அடுத்து வரும் ஆட்சியில் செல்வாக்கு மிகுந்த பதவிக்கு குறி வைக்கத் தொடங்கி விடுவர்.
அந்த வகையில் தான் திமுக ஆட்சியில் கம்பீரமாக வலம் வந்த உயர் போலீஸ் அதிகாரியான எஸ்.ஆர்.ஜாங்கிட், தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு எதிராக பொங்கி எழுந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அது மட்டுமின்றி அந்தக் கடித விபரமும் வெளியில் கசிந்துள்ளது. தற்போதைய அதிமுக ஆட்சியில் டிஜிபி அந்தஸ்துடன் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரி என்ற டம்மி பதவியில் உள்ள எஸ்.ஆர்.ஜாங்கிட் தமிழக காவல்துறை தலைவர் பொறுப்பு வகிக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் சிவில் சர்வீஸ் மூலம் நேரடியாக தேர்வான 30 ஐபிஎஸ் அதிகாரிகள் முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎஸ். அல்லாத 36 அதிகாரிகள் முக்கியமான பதவியில் உள்ளனர். இது ஐபிஎஸ். அதிகாரிகளை பாதிப்புக்கு உள்ளாக்கும். ஐபிஎஸ் அல்லாத அதிகாரிகள் முக்கியமான பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அடுத்த 15 நாட்களுக்குள் உரிய பரிந்துரையை அரசுக்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அது நடைபெறாதபட்சத்தில் நான் கோர்ட்டு மூலம் சட்டரீதியாக பிரச்சினைக்கு தீர்வு காண முயல்வேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.
ஜாங்கிட்டின் இந்தத் திடீர் வேகத்துக்கு காரணம் 23-ந் தேதி வரப்போகிற 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் தான் என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமானால் ஆட்சி கவிழ்வது நிச்சயம். ஒரு வேளை திமுக வசம் ஆட்சி கைமாறினாலும் ஆச்சர்யமில்லை என்ற ரீதியிலேயே தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. அப்படி திமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் முக்கியப் பதவிகளில் அமரப்போகும் அதிகாரிகளில் ஜாங்கிட்டும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.