கேதர்நாத்தில் நவீன குகையில் தியானத்தை முடித்த பிரதமர் மோடி, பத்ரிநாத் கோயிலில் இன்று வழிபட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று(மே19) நடைபெறுகிறது. இதற்கான இறுதி பிரச்சாரத்தை மத்தியப்பிரதேசத்தில் முடித்த பிரதமர் நரேந்திர மோடி டெல்லிக்கு திரும்பியதும் பா.ஜ.க. அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இதன்பின், சனிக்கிழமையன்று அவர் கேதர்நாத் மலையில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். கேதர்நாத்திற்கு ஏற்கனவே பிரதமர் மோடி 4 முறை வந்திருக்கிறார். கடைசியாக அவர் வந்த போது அங்கு நவீன குகை அமைக்க உத்தரவிட்டிருந்தார். இதன்படி, அங்கு ஜிண்டால் குரூப் உதவியுடன் உட் ஸ்டோன் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, மலையைக் குடைந்து நவீன குகை அமைத்திருக்கிறது.
இந்த நவீன குகைக்குள் கட்டில் படுக்கை, டாய்லெட் உள்பட அனைத்து வசதிகளும் உள்ளது. மேலும் தியானம் செய்வதற்கு என தனி இடமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சனிக்கிழமை இங்கு வந்த பிரதமர் மோடிக்கு கோயில் வாயிலில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், அவர் கோயிலுக்குள் சென்று வழிபட்டார். அப்போது பக்தர்கள் யாருமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
பின்னர், நவீன குகைக்குள் தியானம் செய்து தங்கி விட்டு சென்ற பிரதமர் மோடி, ஞாயிறன்று பத்ரிநாத் கோயிலுக்கு சென்றார். கோயில் வாயிலில் பக்தர்களை பார்த்து அவர் கையசைத்தார். பின்னர், கோயிலில் வழிபட்டார். இன்று மாலையில் அவர் வாரணாசிக்கு செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.