பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இல்லாத மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அணிதிரட்டும் பணியில் மும்முரமாகி விட்டார். நேற்று ராகுல் காந்தியை சந்தித்த நாயுடு, இன்றும் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாகியுள்ளது.
மாநிலக் கட்சிகளை ஒன்று சேர்த்து 3-வது அணி அமைக்கப் போகிறேன் என்று கிளம்பிய தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவின் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டு விட்டார் சந்திரபாபு நாயுடு . திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கே.சி.ஆர்.சந்தித்த மறுநாளே, திமுக பொருளாளர் துரைமுருகனை ஆந்திரா வரவழைத்தார் சந்திரபாபு நாயுடு . காங்கிரஸ் தலைமையில் தான் திமுக அணி சேர வேண்டும் என்பதை உறுதிபடக் கூறிய நாயுடு, விறுவிறுவென மற்ற முக்கிய கட்சிகளின் தலைவர்களான மம்தா, சரத் பவார், சரத்யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி.ராஜா, யெச்சூரி ஆகியோரை சந்தித்து ஆலோசித்தார்.
அதன் பின் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தி விட்டு, நேற்று மாலையே உ.பி.தலைநகர் லக்னோவுக்கு பறந்தார். அங்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருடன் சந்திப்பு நடத்திய நாயுடு மீண்டும் இன்று டெல்லி திரும்பினார்.
இன்று ராகுல் காந்தியை 2-வது தடவையாக சந்தித்த நாயுடு, மாயாவதி மற்றும் அகிலேசுடன் நடத்திய பேச்சு குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று மாலையில் சோனியா காந்தியையும் நாயுடு சந்திக்க உள்ளார்.
பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பிற கட்சிகளின் தயவில் அக்கட்சி மீண்டும் அரியணையில் அமர்ந்து விடக் கூடாது என்பதில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். அவருடைய இந்த முயற்சிகள் பலனளிக்குமா? என்பது தான் டெல்லி வட்டாரத்தில் இப்போது பரபரப்பான பேச்சாக உள்ளது. இதற்கான விடை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் சோனியா காந்தி கூட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது தெரிய வரும் என்று கூறப்படுகிறது.