மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நியூஸ் 18 தொலைக்காட்சி எடுத்த கணிப்பில் பாஜக 292 முதல் 312 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 62 முதல் 72 தொகுதிகளும், பிற கட்சிகளுக்கு 102 முதல் 112 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் வந்து விட்டாலே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் என்பது சமீப காலமாக பிரபலமாகி விட்டது. நாளிதழ்கள் தொடங்கி பல்வேறு செய்தி டிவி நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் கருத்துக் கணிப்புகளை போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுவதை வாடிக்கையாக்கி வருகின்றன.
இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் எந்தளவுக்கு சரியாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாதும் ஓரளவுக்கு முடிவுகள் இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதை கணித்து விடலாம்.
கடந்த 2014 பொதுத் தேர்தலின் போது வெளியான கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என்று கூறினாலும் பாஜக தனி மெஜாரிட்டி பெறும் என்று கணிக்கப்படவில்லை. அதே போல் 2004-ல் வாஜ்பாய் மீண்டும் பிரதமர் ஆவார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைத்து விட்டது. அதே போல் 2009-ல் காங்கிரஸ் மெஜாரிட்டி பெறாது என்று கூறப்பட்ட நிலையில் தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் தற்போது 17-வது மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. இதன்படி நியூஸ் 18 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கணிப்பில் பாஜகவுக்கு 292 முதல் 312 வரை கிடைத்து தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 62 முதல் 72 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு என்றும் பிற கட்சிகளுக்கு 102 முதல் 112 வரை கிடைக்கும் என்று கூறப் பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் திமுக கூட்டணி 22 முதல் 24 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 14 முதல் 16 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் நியூஸ் 18 தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு கூறப்பட்டுள்ளது.