ஒப்புகைச் சீட்டை முதலில் சரிபார்க்க வேண்டும்... எதிர்க்கட்சிகள் கோரிக்கை... தேர்தல் ஆணையம் நிராகரிப்பு!

EC rejects Opposition parties demands to verification of vvpat slips before counting votes

by Nagaraj, May 22, 2019, 14:38 PM IST

வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டைத்தான் முதலில் சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான சந்தேகங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளால் இப்போது சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லுகள் நடைபெறலாம் என்று பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் அபாயச்சங்கு ஊதியுள்ளனர்.

இதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முதலில் சரிபார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக,தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக எம்பி கனிமொழி, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் தலைவர் சதீஷ் சந்திரா உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர்.

அப்போது வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்ப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பு முதலில் வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போது ஏதேனும் வித்தியாசம் ஏற்பட்டால், குறிப்பிட்ட சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகள் அனைத்திலும், மொத்த வாக்கு ஒப்புகைச் சீட்டையும் வாக்கு எந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து இன்று பரிசீலித்து முடிவெடுப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியிருந்தனர்.இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் முழுவதும் முதலில் எண்ணி முடிக்கப்படும். அதன் பின்னர் ஒரு சட்டசபைத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகள் என குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்படும்.

You'r reading ஒப்புகைச் சீட்டை முதலில் சரிபார்க்க வேண்டும்... எதிர்க்கட்சிகள் கோரிக்கை... தேர்தல் ஆணையம் நிராகரிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை