மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்...! ஆனா எங்க பூத் ஏஜண்ட் போட்ட ஓட்டு எங்கே?- டிடிவி தினகரன் கேள்வி!

Where is my party booth agents vote, ammk leader TTV Dinakaran questions EC

May 26, 2019, 13:52 PM IST

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆனால் எங்கள் பூத் ஏஜன்டுகள் போட்ட ஓட்டுகள் கூட காணாமல் போயுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த வாக்குகளும், வெற்றியும் கிடைக்காமல் போனதற்கான காரணம் போகப் போகத் தெரியும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.


நடந்து முடிந்த மக்களவை மற்றும் 22 சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்து களம் கண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதிமுக வாக்குகளை கணிசமாகப் பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் கட்சி, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்து விட்டது. பெரும்பாலான தொகுதிகளில் நடிகர் கமல், நடிகர் சீமான் ஆகியோரின் கட்சிகளை விட குறைவான வாக்குகளைப் பெற்று, அக்கட்சியே காணாமல் போகுமளவுக்கு பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அமமுகவால் தேர்தலுக்குப் பின் என்ன ஆகுமோ? என்ற கலக்கத்தில் இருந்த அதிமுக தரப்பு, தினகரனுக்கு செல்வாக்கு இல்லாமல் போனதால் இப்போது நிம்மதியடைந்துள்ளனர்.


இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது பல பூத்களில் எங்கள் கட்சிக்கு பூஜ்யம் என்று காட்டியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பூத்திலும் 4,5 ஏஜன்டுகளை நியமித்திருந்தோம். அவர்கள் போட்ட ஓட்டு எங்கே போனது என தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் எதிர்பார்த்த வாக்குகளும், வெற்றியும் கிடைக்காமல் போனதற்கான காரணம் போகப்போகத் தெரியத்தான் போகிறது.


அதிமுகவில் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் இன்னும் இருக்கின்றார்கள். சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அது தெரிய வரும்.

எங்கள் கட்சியிலிருந்து ஒரு சிலர் வெளியேறுவதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. வரும் 28-ந் தேதி பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க உள்ளேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

You'r reading மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்...! ஆனா எங்க பூத் ஏஜண்ட் போட்ட ஓட்டு எங்கே?- டிடிவி தினகரன் கேள்வி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை