மகனுக்கு சீட் கேட்டு மிரட்டிய ப.சிதம்பரம் .... அம்பலப்படுத்திய ராகுல் காந்தி!!

In CWC meeting Rahul Gandhi blames senior leaders were threatened to get seat for their sons

by Nagaraj, May 27, 2019, 09:32 AM IST

ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், கட்சியை வளர்ப்பதற்குப் பதில் தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். சீட் தராவிட்டால் ராஜினாமா செய்யப் போவதாகக் கூட ப.சிதம்பரம் மிரட்டினார் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட மாபெரும் சரிவு குறித்து ஆராய்வதற்காக அக்கட்சியின் உயர் அதிகாரம் படைத்த காரியக் கமிட்டி கூட்டம் கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடந்தது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு உணர்ச்சிகரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளது.காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றபின் சந்தித்த முதல் பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாக ராகுல் தெரிவிக்க, கட்சியின் மற்ற தலைவர்கள் அதனை ஏற்க மறுத்து அவரை சமாதானம் செய்துள்ளனர் .

அப்போது ராகுல் காந்திக்கு ஆதரவுக் குரல் கொடுத்து குறுக்கிட்டுள்ள பிரியங்கா காந்தி, இந்தத் தேர்தல் களத்தில் ராகுல் காந்தியை மற்ற காங்கிரஸ் தலைவர்கள் கைவிட்டு விட்டனர். தேர்தல் எனும் போரில் தனித்தே போராடினார் ராகுல் காந்தி. பாஜகவுக்கு எதிரான ரபேல் பிரச்னை, பணமதிப் பிழப்பு, ஜிஎஸ்டி பிரச்னை போன்றவற்றை மக்களிடம் தனி ஒரு ஆளாகவே ராகுல் கொண்டு செல்ல முயன்றார். மற்ற தலைவர்களோ தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்குவதிலும், அவர்களை வெற்றி பெறச் செய்வதிலுமே கவனம் செலுத்தினர் என பெயர் குறிப்பிடாமல் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை ஆமோதித்த ராகுல் காந்தி, பகிரங்கமாகவே அந்தத் தலைவர்கள் யார் என்பதை கூட்டத்தில் பகிரங்கமாகவே போட்டுடைத்துள்ளார். ப.சிதம்பரம் தனது மகனுக்காக சீட் பெறுவதற்கு டெல்லியில் பல நாட்கள் முகாமிட்டு நாட்களை செலவிட்டார். ஒரு கட்டத்த்தில் மகனுக்கு சீட் தராவிட்டால் கட்சியிலிருந்து விலகி விடுவேன் என்று மிரட்டல் கூட விடுத்தார்.

இதே போன்று ம.பி.முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரும் தங்கள் வாரிசுகளுக்கு சீட் பெறுவதில் தான் குறியாக இருந்தனர். சீட் கொடுக்காவிட்டால் முதல்வர் பதவி வகிப்பதில் என்ன அர்த்தம் என்றும் விவாதம் செய்து சாதித்தனர். பின்னர் வாரிசுகள் போட்டியிட்ட தொகுதிகளில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தினர் என்று ராகுல் காந்தி வேதனையுடன் உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.

அதன் பின் உருக்கமாக பேசிய ராகுல் காந்தி, கட்சியின் வளர்ச்சி தான் முக்கியம். அதற்கு சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும். எங்கள் குடும்பத்தில் இருந்துதான் தலைவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. எனக்குப் பின் இனிமேல் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தலைவராக வர மாட்டார்கள் என்பது உறுதி என்றெல்லாம் உணர்ச்சி பொங்க பேசி, தற்போதைய தலைவர்களை தலையைத் தொங்கப் போடச் செய்து விட்டாராம் ராகுல் காந்தி.ராகுலின் இந்த உணர்ச்சிகரமான பேச்சு தான் காங்கிரஸ் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் காங்கிரசில் பல பெருந்தலைகளின் பதவிக்கு விரைவில் ஆபத்து வரலாம் என்றே கூறப்படுகிறது.

You'r reading மகனுக்கு சீட் கேட்டு மிரட்டிய ப.சிதம்பரம் .... அம்பலப்படுத்திய ராகுல் காந்தி!! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை