வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக பிரதமர் மோடி வாரணாசி சென்றார். அங்கு ஊர்வலமாகச் சென்ற பிரதமர் மோடியை 5 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்ற பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
நடந்து முடிந்த தேர்தலில் இரண்டாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மீண்டும் பிரதமராக வரும் 30-ந் தேதி பதவியேற்க உள்ள மோடி, நேற்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்று தனது தாயாரிடம் ஆசி பெற்றார். இன்று காலை தான் போட்டியிட்டு வாகை சூடிய வாரணாசியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றார். வாரணாசி விமான நிலையம் சென்றடைந்த மோடிக்கு உ.பி.மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் திரண்டிருந்த பாஜக தலைவர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் வாகனத்தில் 5 கி.மீ. தூரம் ஊர்வலமாகச் சென்ற பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் திரண்டிருந்த பாஜக தொண்டர்களும், பொது மக்களும் மலர் தூவியும், மேள, தாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடனும் உற்சாகமாக வரவேற்பளித்தனர். அவர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவித்தபடி பிரதமர் மோடி சென்றார். பின்னர் நேராக புகழ் பெற்ற காசி விசுவநாதர் ஆலயம் சென்றார்.
அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்ட மோடி, சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து பிரார்த்தனையிலும் ஈடுபட்டார். இதன் பின் வாரணாசியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு வாரணாசி முழுவதும் திருவிழாக் கொண்டாட்டம் போல் காட்சியளிக்கிறது.