வரும் 30-ந் தேதி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்கும் விழாவுக்கு நடிகர் ரஜினிக்கு பாஜக சார்பில் சிறப்பு அழைப்பு விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்கிறார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் விழாவில் பிரதமராக மோடி பதவி ஏற்க இருப்பதாகவும், அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். அதே போல் பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளை ர்.
இந்நிலையில் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜக சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதனால் தர்பார் படப்பிடிப்புக்காக நாளை மும்பை செல்லும் ரஜினிகாந்த், 30-ந் தேதி மும்பையில் இருந்து டெல்லி சென்று மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்றும் தெரிகிறது.