இடைத்தேர்தல் வெற்றி திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு ... 9 அதிமுகவினர் நாளை பொறுப்பேற்பு

Assembly by-election, newly elected Dmk MLAs will take ooth today:

by Nagaraj, May 28, 2019, 08:48 AM IST

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த 22 தொகுதிகளின் தேர்தல், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு வாழ்வா? சாவா?போராட்டம் போல் இருந்தது. குறைந்தது 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி நீடிக்கும் என்ற நிலையில் திமுகவுடன் கடும் பலப்பரீட்சை நடத்தியது அதிமுக. இதனால் இந்த 22 தொகுதிகளின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்தது.

கடந்த 23-ந் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன், இந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. திமுக 13 இடங்களிலும், அதிமுகவோ ஆட்சியை தக்க வைப்பதற்கான 9 இடங்களிலும் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்று அக்கட்சியினரை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்தது.

இந்நிலையில் திமுக சார்பில் வெற்றி பெற்ற 13 எம்எல்ஏக்களும் இன்று காலை 11 மணிக்கு சட்டப் பேரவை சபாநாயகர் முன் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

திமுகவுக்கு ஏற்கனவே 88 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், புதிதாக வெற்றி பெற்ற 13 பேரையும் சேர்த்து சட்டப் பேரவையில் அக்கட்சியின் பலம் 101 ஆக அதிகரித்துள்ளது.

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 9 எம்எல்ஏக்களும் நாளை காலை பொறுப்பேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த எச்.வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் எம்எல்ஏ பதவியை நாளை நாளை ராஜினாமா செய்யவுள்ளதால் நாங்குநேரி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading இடைத்தேர்தல் வெற்றி திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு ... 9 அதிமுகவினர் நாளை பொறுப்பேற்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை