மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையக் காரணமே, மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி தான் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று மோடி பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார். பதிலுக்கு மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிக்கும், கமலுக்கும் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தது பாஜக மேலிடம் .
இந்நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜகவுக்கு கிடைத்த இந்த மாபெரும் வெற்றி என்பது மோடி என்ற தனிநபருக்கு கிடைத்த வெற்றி.நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்ற மக்களை ஈர்க்கும் தலைவராக மோடி திகழ்கிறார். தமிழகத்திலும் காமராஜர், அண்ணாவிற்கு பிறகு புகழ் பெற்ற தலைவராகியுள்ளார். ஆனாலும் மோடிக்கு எதிராக வீசிய அலையால் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன என்று ரஜினி கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். இங்கு பாஜக தோற்றாலும் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. முதலில் தண்ணீர் பிரச்னைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதாகவும் ரஜினி தெரிவித்தார்.
கட்சி ஆரம்பித்து 14 மாதங்களில் அபார வாக்குகள் பெற்ற நண்பர் கமலஹாசனுக்கு வாழ்த்துக்கள் என்றும் ரஜினி பாராட்டு தெரிவித்தார்.