துபாய் தமிழர் ஒருவர் ஆரம்பித்து வைத்த நேசமணி ஹேஸ்டேக், ட்விட்டரில் படுவேகமாக டிரெண்டிங் ஆகி வருகிறது. இது மோடி சர்க்கார் 2 என்ற ஹேஸ்டேக்குடன் போட்டி போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முகநூலில் Civil Engineers Learners என்ற ஒரு பக்கத்தில், மே 27ம் தேதியன்று ஒரு சுத்தியல் படத்தைப் போட்டு. ‘இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள்?’ எனக் கேட்கப்பட்டிருந்தது.
அந்தப் படத்தின் கீழ், துபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், ‘‘இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன் மீதாவது அடித்தால் ‘டங், டங்’ என சத்தம் வரும். ஜமீன்தார் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயின்டிங் கான்டிராக்டர் நேசமணியின் தலையில் இதை அவரது உறவினர் மகன் போட்டு மண்டையை உடைத்து விட்டார். பாவம்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பின்பு, ‘நேசமணிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்ற பொருளில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டேக்கையும் பயன்படுத்தியிருந்தார்.
நடிகர்கள் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் கட்டட வேலைகளைச் செய்யும் கான்டிராக்டராக வரும் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப் போடும் காட்சியையே விக்னேஷ் பிரபாகர் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி. ரமேஷ் கண்ணாவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி.
இந்த ஹாஷ்டாக் நேற்று முதலில் சென்னையிலும் பிறகு உலக அளவிலும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி விட்டது. இதில், தமிழகத்தில் நடந்த அத்தனை சம்பவங்களையும் இணைத்து ஆளாளுக்கு கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது ஊடகங்களுக்கு அ.தி.மு.க.வினர் அளித்த பேட்டிகள் உள்பட பல செய்திகளை, வடிவேலு புகைப்படத்தை வைத்து உருவாக்கி, மீம்ஸ்களும் வீடியோ காட்சிகளும் இந்த ஹாஸ்டேக்கில் போட்டு வருகின்றனர். ‘‘நேசமணி இட்லி சாப்பிடுகிறார்’’ என்று சி.ஆர்.சரஸ்வதி பேட்டி அளிக்கும் காட்சி, பிரதமர் மோடி கையைப் பிடித்து கொண்டு ஓ.பி.எஸ். இருக்கும் காட்சியை போட்டு, ‘‘மருத்துவமனையில் நேசமணியைப் பார்த்து விட்டு ஓ.பி.எஸ்.சுக்கு ஆறுதல் சொல்லும் மோடி’’ என்று பலவாறாக கலாய்த்து வருகின்றனர். நேசமணிக்காக கிரிக்கெட் வீரர்கள் டோனி, ஹர்பஜன்சிங் போன்றவர்கள் பிரார்த்தனை செய்வது போன்றும், பல நடிகர்கள் ஆறுதல் சொல்வது போன்றும் என பல கற்பனைகள் விழுந்து கொண்டே இருக்கின்றன.
நரேந்திரமோடி பிரதமராக இன்று இரவு 7 மணிக்கு பதவியேற்கும் நிலையில், ‘மோடி சர்க்கார்-2’ என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. இதையும் தாண்டி, தற்போது நேசமணி ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. எனவே, மோடி சர்க்கார்-2 டிரெண்டிங்கை தடுப்பதற்காகவே நேசமணி ஹேஸ்டேக் போடப்பட்டதா? தமிழர்கள்தான் இது போன்ற குசும்பு வேலைகளில் ஈடுபடுவார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்களோ என்று நினைக்க வேண்யுள்ளது.
எப்படியோ, இந்திய அளவில் தற்போது இந்த இரண்டும் மாறி, மாறி டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகின்றன.