கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை... தேமுதிக அந்தஸ்து அம்பேல்... தேர்தல் ஆணையம் விறுவிறு நடவடிக்கை

Dmdk party is facing to looses state party recognition by EC soon

by Nagaraj, Jun 2, 2019, 16:49 PM IST

தொடர்ந்து தேர்தல்களில் சரிவைச் சந்தித்து வாக்கு சதவீதத்தில் அதல பாதாளத்துக்கு சென்று விட்ட தேமுதிகவின் கட்சி, சின்னம் அந்தஸ்து பறிபோவது உறுதியாகிவிட்டது. இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


2005-ல் மதுரை திருப்பரங்குன்றம் அருகே பிரமாண்ட பேரணி நடத்தி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை விஜயகாந்த் தொடங்கினார். அதிமுக, திமுக கட்சிகள் மீது ஒரு வித சலிப்புத்தன்மையுடன் தமிழக மக்கள் இருந்த காலத்தில், விஜயகாந்தை இருகரம் கூப்பி வரவேற்றனர். கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே 2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துக் களம் கண்ட விஜயகாந்த், அவர் மட்டுமே வெற்றி பெற்றாலும், 8.38% வாக்குகளை அறுவடை செய்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.


இதனால் தமிழகத்தின் மாபெரும் சக்தியாக வரப்போகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அதே ஆண்டில் தொடர்ந்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான வெற்றிகளை குவித்தது தேமுதிக. 2009-ல் மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு, வெற்றி பெறாவிட்டாலும், தேமுதிகவின் வாக்கு சதவீதம் 10.3% ஆக அதிகரித்தது.


தேமுதிகவின் செல்வாக்கு அதிகரித்து வந்த நேரத்தில் தான் 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் கூட்டணிக்கு விஜயகாந்தை வலை வீசின. கடைசியில் அதிமுக கூட்டணி வலையில் விழுந்த விஜயகாந்த், அதிமுகவின் வெற்றிக்கு காரணமான துடன், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். ஆனால் வாக்கு சதவீதம் 7.9 ஆக குறைந்தது . எதிர்க்கட்சித் தலைவரான சில காலத்திலேயே, முதல்வர் ஜெயலலிதாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க தேமுதிகவின் சரிவு ஆரம்பித்துவிட்டது.

தேமுதிக எம்எல்ஏக்களை ஜெயலலிதா திட்டமிட்டு பிரித்தாள, கட்சியின் செல்வாக்கும் இறங்குமுகமாகி விட்டது. இதன் பின் 2014-ல் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கண்டு ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாமல் வாக்கு சக வீதம் 5.19 ஆக குறைய ஆரம்பித்து விட்டது.


அதன் பின்னர் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. அப்போதும் திமுக கூட்டணிக்கு வலிய அழைத்தார் கருணாநிதி . இந்த முறை விஜயகாந்த் எடுத்த மாபெரும் தவறான முடிவு கட்சியையே ஆட்டம் காணச் செய்து விட்டது. அதுதான் முதல்வர் கனவில், தம்முடைய தலைமையில், வைகோ, திருமாவளவன், ஜி.கே.வாசன் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அமைத்த மக்கள் நலக் கூட்டணி . இந்தக் கூட்டணியை மக்கள் கண்டு கொள்ளாமல் போக, தேமுதிக வாக்கு சதவீதம் கிடு கிடுவென சரிந்து 2.39 ஆகி விட்டது.


அதன் பின்னர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் போக, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகியோரின் பிடியில் சிக்கிய தேமுதிகவின் நிலையோ கவலைக்கிடமாக போய்விட்டது. ஆனாலும் தற்போது நடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் தே.மு.தி.க வுக்கு ஓரளவுக்கு கிராக்கி இருக்கத்தான் செய்தது.


இம்முறையும் தேமுதிகவை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள திமுகவும், அதிமுக போட்டி போட , இரு தரப்பிடமும் பிடி கொடுக்காமல் கடைசி வரை பேரம் ஒன்றிலேயே குறியாக பிரேமலதாவும், சுதீசும் ஆட்டம் காட்டி கடைசியில் அசிங்கப் பட்டது தான் மிச்சம்.கடைசி நேரத்தில் பாஜகவின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாக கூட்டணியில் சேர்த்துக் கொண்ட அதிமுக, செல்வாக்கில்லாத தொகுதிகளை ஒதுக்கியது. இதில் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் மோசமான தோல்வியை தழுவி, 2.19 % வாக்குகளுடன் இப்போது நிர்க்கதியாகிவிட்டது தேமுதிக.


அது மட்டுமின்றி தொடர்ந்து 3 தேர்தல்களில் 6% வாக்குகளுக்கும் குறைவாக பெற்ற காரணத்தால் இப்போது தேமுதிகவின் மாநிலக் கட்சி அந்தஸ்தும், முரசுச் சின்னமும் பறிபோகும் அபாயமும் நெருங்கி விட்டது. இப்போது தேமுதிகவின் சமீபத்திய வாக்கு சதவீத புள்ளி விபரங்களை தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் சேகரித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் தேமுதிகவுக்கு கட்சி அங்கீகாரம் பறிபோகும் தகவலுடன் விரைவில் நோட்டீஸ் வரும் என்று கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் அங்கீகாரம் இழந்து தவிக்கின்றன. தேமுதிகவின் அங்கீகாரமும் பறி போகும் பட்சத்தில் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மட்டுமே மாநிலக் கட்சிகள் என்ற அந்தஸ்துடன் இருக்கப் போகின்றன.

You'r reading கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை... தேமுதிக அந்தஸ்து அம்பேல்... தேர்தல் ஆணையம் விறுவிறு நடவடிக்கை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை