காவி முண்டாசில் பாரதியார் கொதிக்கும் தங்கம் தென்னரசு

by எஸ். எம். கணபதி, Jun 4, 2019, 08:45 AM IST

பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகையை காவி நிறத்தில் அச்சடித்திருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ‘‘காவி முண்டாசு கட்டிய பாரதியார் படத்தை யாராவது எப்பவாது பார்த்திருக்கிறீர்களா?’’ என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கோபமாக கேட்டுள்ளார்.

தமிழகத்தில் 6, 9, 11ம் வகுப்புகள் தவிர மீதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புதிய பாடப்புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 3ம் தேதி வழங்கினார். பள்ளி திறந்த நாளிலேயே புத்தகங்களை வழங்கியது மகிழ்ச்சியை தந்தாலும், 12ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டையில் பாரதியாரின் உருவத்தை ஓவியமாக வரைந்து அச்சிட்டுள்ளனர்.

அதில் கொடுமை என்னவென்றால், பாரதியாருக்கு காவி முண்டாசு கட்டி விட்டிருக்கிறார்கள். முண்டாசு கவிஞர் என்று பெயர் பெற்ற சுப்பிரமணிய பாரதியார் உலகம் போற்றும் தமிழ் கவிஞர், அவர் எப்போதுமே வெள்ளை நிற தலைப்பாகை(முண்டாசு) கட்டியிருப்பார். இதை அவரது பழைய புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களில் காணலாம். ஆனால், பாரதியாரின் தலைப்பாகையை காவி நிறத்தில் அச்சடித்தது வேண்டுமென்றே செய்தது போலிருக்கிறது.

இது தமிழகத்தில் மீண்டும் ஒரு புயலை கிளப்பப் போகிறது. மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்வி வரைவு கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழி திட்டம் என்ற பெயரில் இந்தி கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, இந்தி பேசாத பிற மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பவே, இந்தி கட்டாயம் என்பதை நீக்கி விட்டு, மத்திய அரசு புதிய வரைவு கொள்கையை வெளியிட்டிருக்கிறது.

இந்த பிரச்னை ஓய்ந்த நிலையில், புதிய சர்ச்சையை ‘காவி பாரதியார்’ ஏற்படுத்தியிருக்கிறார். இது குறித்து தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், ‘‘காவி முண்டாசு கட்டிய பாரதியார் படத்தை யாராவது எப்பவாது பார்த்திருக்கிறீர்களா?’’ என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார். பாடப்புத்தகங்களில் கொஞ்சம், கொஞ்சமாக காவியை புகுத்தும் நோக்கம்தான் இதிலிருந்து வெளிப்படுகிறது என்று தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் ஆசிரியை கலைச்செல்வி கூறுகையில், ‘‘வழக்கமாக, தமிழ் பாடப்புத்தகங்களில் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களின் சிற்பக்கலையை போற்றும் வகையில் அந்த சிற்பங்களை பிரசுரம் செய்வார்கள். புதிய தமிழ் பாடப்புத்தகத்தில், பாரதியார் படத்தை போட்டதில் தவறில்லை. அதையும் அரைகுறையாக வரைந்திருக்கிறரார்கள். அதை பார்க்கும் போது, பாரதியார் படம் போல் தெரியவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போல் தெரிகிறது’’ என்றார்.
இன்னொரு ஆசிரியர் கூறுகையில், ‘‘தமிழுக்கு எல்லா மதத்தினரும் மகுடம் சூட்டியிருக்கிறார்கள். வீரமாமுனிவர் என அழைக்கப்படும் கான்ஸ்டன்டைன், ஜி.யு.போப், உமறுப்புலவர் உள்பட கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தினரும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவியுள்ளார்கள். எனவே, தமிழ்மொழிக்கு மத அடையாளம் காட்டுவது தவறானது’’ என்றார்.

இது குறித்து, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி கூறுகையில், ‘கல்வியில் அரசியல், மதம் எதற்கும் தொடர்பு இல்லை. பாரதியாரின் தலைப்பாகையை காவி நிறத்தில் அச்சடித்தது, தெரியாமல் நடந்த தவறு. அது சரி செய்யப்படும்’’ என்றார்.


Leave a reply