2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க இலக்கு, நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தவிர்த்து அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர்.
பிரதமராக மோடி 2-வது முறையாக பதவியேற்ற பின் முதன் முறையாக நடைபெறும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். ஆட்சி நிர்வாகத்தில், அனைத்து விஷயங்களிலும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்.
இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை எட்ட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை 2024-க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றுவதற்கான இலக்கு சவாலானது தான் என்றாலும், மாநிலங்களின் கூட்டு முயற்சியால் அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. 2025-க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிப்பதில் ஏற்றுமதித் துறை முக்கியமானது. ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜலசக்தி துறை அமைச்சகம் தண்ணீர் விவகாரத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க உதவும்
நாட்டில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்க வேண்டும். 2022-ம் ஆண்டுக்குள் அந்த இலக்கை அடைய மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசனார்.
-தமிழ்