மே.வங்கத்தில் டாக்டர்கள் நடத்தி வரும் போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறேன். ஏராளமான நோயாளிகள் காத்துக் கிடக்கிறார்கள். பணிக்கு திரும்புங்கள் என்று பணி வாக அழைப்பு விடுத்துள்ளார் மம்தா.
மே.வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10-ந் நோயாளியின் உறவினர் ஒருவர் தாக்கியதில் பயிற்சி டாக்டர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். இதனால் அரசு டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஐந்து நாட்களுக்கும் மேலாக ப போராட்டம் நீடிப்பதால் மே.வங்கத்தில் மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
டாக்டர்களின் கோரிக்கைகளை செவிசாய்க்காமல் முதல்வர் மம்தாவும் பிடிவாதம் செய்ததால் போராட்டம் மேலும் தீவிரமடைந்து 700 -க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பளியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தனர். போராட்டம் நடத்தும் மே.வங்க டாக்டர்களுக்கு ஆதரவாக வரும் 17-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதுமே டாக்டர்கள் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்த டாக்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த முறை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள டாக்டர்கள் மறுப்பு தெரிவித்து நிபந்தனையும் விதித்தனர். முதலில் மம்தா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தனது பிடிவாதத்தை தளர்த்திய மம்தா, இன்று டாக்டர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக அறிவித்துள்ளார். இன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, தாக்கப்பட்ட டாக்டர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் எனவும் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக காத்துகொண்டு இருக்கின்றனர். டாக்டர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கிறேன்.
டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இரண்டு நாட்களாக காத்திருக்கிறேன். நீங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நாங்கள் எந்த ஒரு தனி மனிதனையும் கைது செய்ய மாட்டோம். டாக்டர்களுக்கு எதிராக எவ்வித போலீஸ் நடவடிக்கையும் இருக்காது. நான் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. நல்ல புத்தி மேலோங்கட்டும் என பேச்சு நடத்த அழைப்பு விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.